Thursday, 24 November 2016"

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மணியைப்பார்த்தான் சாந்தன். இவ்வளவு நேரமாகவா தூங்கியிருக்கிறன்...?- அவசர அவசரமாக எழுந்து பேக்கிலிருந்து துவாலையையும், தூரிகையையும் எடுத்துக்கொண்டு, கிணற்றடிக்குச் சென்றான். 

குளித்துமுடித்து, அவன் முன்னறைக்குள் வந்தபோது, சமயலறையில் அவனுக்குப்பிடித்தமான சமையல் நடைபெறுவதற்கான அறிகுறியாக, வாசம் நாசியைத் தொட்டது. 

"அம்மா... என்ன சமையலெல்லாம் தடபுடலாயிருக்கு..?- கேட்டுக்கொண்டு அடுப்படிக்குள் போனான். 

மகனின் குரலைக் கேட்டதும், " வா சாந்தா.. நல்ல நித்திரையோ... வராதவன் வந்திருக்கிற.. அதான் மத்தியானம் விருந்து.. தேத்தண்ணி போடட்டே..? அல்லது இன்னும் கொஞ்சநேரத்தில மத்தியானச்சாப்பாடே சாப்பிடுறியா..?"- பரிமளம் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகவும்,

"சாப்பாடே போதும்...உங்களுக்கு எத்தனை தரம் சொல்லியிருக்கிறன் சாந்தா எண்ட பேர்ல கூப்பிடாதேங்கோ எண்டு..."

"சரி சரி.. கோவப்படாத.. அது என்ரை தங்கச்சியின்ர பேர்.. ஆசையில கூப்பிடுறது.. "- சாந்தனைச் சமாதானப்படுத்திவிட்டு பரிமளம் மதியச்சமையலில் மும்முரமானாள்.

தாயின் வேலையைக் குழப்ப மனமில்லாவிட்டாலும், "அப்பா ஏன் திடீரெண்டு வரச்சொன்னார்.." என்ற கேள்வி மறுபடி அவனுள் எழுந்ததை அலட்சியப்படுத்தாமல், 
"அம்மா... இப்பயாவது சொல்லுங்கோ ஏன் வேலைக்கு லீவு போட்டுட்டு வரச்சொன்னவர் அப்பா...?"
"கைவேலையைத் தொடர்ந்தபடியே, "இப்பத்தான் எழும்பியிருக்கிற... கொஞ்சம் பொறு.. மத்தியானம் சாப்பிட்டுட்டு ஆறுதலாக் கதைக்கலாம்..."- அம்மா இனி இதுபற்றி எதுவும் சொல்லமாட்டா என்று தெரிந்துகொண்டவனுக்கு ஒன்றுமட்டும் நல்லா விளங்கியது. "இந்த மௌனம் நல்லதுக்கில்லை என்பதாய்.

டியூசனுக்குப்போயிருந்த கலா, கடையைப் பூட்டிக்கொண்டு சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்துவிட்டிருந்த தாத்தா, அப்பா எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட்ட உணவு சந்தோஷமாக உள்ளிறங்கியது சாந்தனுக்கு.

"என்னதான் பெரிய கடைகளாகத் தேடிப்போய்ச் சாப்பிட்டாலும் இந்தளவுக்கு இருக்குதில்லை..."- பரிமளம் குளிர்ந்துபோவாளென்று தெரிந்தே சாந்தன் சொல்ல, 
"சாப்பாடெண்டில்லை.. எல்லாவிசயத்தையும் கலந்துபேசிச்செய்வதைப்போல மனநிறைவு வேறென்ன இருக்கப்போகுது ராசா..."- தாத்தா என்னவோ பீடிகையோடு பேசுமாப்போல இருக்கவே சாந்தன் மெதுவாகத் தூண்டிலை வீசினான். 
"தாத்தா.. சரியாகத்தான் சொல்லுறீங்கள்.. தனியாக அறை வாடகைக்கெடுத்து, என்னெண்டாலும் நானே யோசிச்சுச் செய்யேக்கை, உங்கட அறிவுரைகளில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டுதானிருக்கிறன்..."- அவன் வைத்தகுறி தப்பாமல் தாத்தாவின் இதயத்தைத் தொட்டுவிட்டதென்பதற்கு அடையாளமாக, இடதுகையால் சாந்தனின் தலையைத் தடவியவர், 

"இனியும் நீ தனியாயிருந்து ஏன் கஷ்டப்படவேணும் ராசா... ?"

"வேற என்ன செய்யுறது... படிப்புக்கேத்த வேலை ஊரில கிடைக்காட்டி, வேற இடங்களுக்குத்தானே போகவேண்டிக்கிடக்கு..."

"போறதுல பிழையில்லை... ஒரே இடத்தில் தேங்கிக்கிடந்தால், தண்ணி மட்டுமில்லை மனுசரும் அழுக்காகிப்போவினம்... பிள்ளை கொஞ்சம் சோறு போட்டு, குழம்பு விடு..."- நிதானமாக சோற்றைப் பிசைந்துகொண்டிருந்த தாத்தா எப்ப விசயத்துக்கு வரப்போறாரென்ற எதிர்பார்ப்பு சாந்தனுக்குள்.

அவன் தொண்டையைச் செறுமி மீண்டும் பேச்சைத் தொடங்குவதற்குள், தாத்தாவே ஆரம்பித்தார். 

"உனக்கும் வயதாகுது தம்பி...உன்ரை அம்மாவுக்கு எப்பவும் உன்ரை நினைப்புத்தான்... எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறம்..."

"கடைசியில் வந்தேவிட்டது"- மனதுக்குள் தன் எண்ணம் உறுதிப்பட, "என்ன முடிவு எடுத்திருக்கிறீங்கள்...?"-சாந்தனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பெற்றவர்கள், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, தாத்தா அவர்களை ஒருமுறை பார்த்துவிட்டு "கனநாளைக்குப்பிறகு அம்மான்ரை சமையலை ருசிபார்க்கிற.. உன்னைக் குழப்பிக்கொண்டிருக்கிறன் பார்... முதலில ஒழுங்காச் சாப்பிட்டு முடி. பிறகு கதைப்பம்.."- 

"சரி... இப்பச் சொல்லுங்கோ.. என்னை ஏன் அவசரமாக வெளிக்கிட்டு வரச்சொன்னனீங்கள்...?"- வெளித்திண்ணையில் காற்று வாங்கிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் வந்துநின்றுகொண்டான் சாந்தன். 

"இப்பிடி வந்து உட்கார்... விளக்கமாக் கதைக்கத்தானே கூப்பிட்டனாங்கள்..."- அம்மா சொல்லிவிட்டு நகர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.

"உனக்கு சியாமளாவை நினைவிருக்கோ..?"- அப்பா கேட்டார். 


"வடிவேலு மாமாவின்ர மகள்தானே... எப்பிடி மறக்கமுடியும்.. என்ரை சின்னவயசுச் சினேகிதி அவள்.. இப்ப எப்பிடி இருக்கிறாள்... ஆறேழு வருசத்துக்கு முன்னால எங்கட கோயில் திருவிழாவில கண்டதோட சரி..."

"அவள் நல்லாத்தானிருக்கிறாள்... வடிவேலண்ணைக்குத்தான் பாரிசவாதம் வந்து படுத்த படுக்கையாகிட்டார்...சிவா வெளிநாட்டுக்குப் போனதால நல்லவேளையாகக் குடும்பம் நடுத்தெருவுக்கு வராமல் தப்பிச்சுது..."- வருத்தத்துடன் சொன்ன அப்பாவை அதிர்ச்சியுடன் பார்த்தான் சாந்தன். 

"ஏனப்பா.. இதை நான் வந்தவுடனேயே சொல்லியிருந்தால் உடனேயே போய்ப் பார்த்திருப்பேனே... பின்னேரம் ஒருக்காப் போய்ட்டு வாறன்..."

"அவசரப்படாதேடா... போனகிழமை நல்லம்மா இஞ்ச வந்திருந்தவ... சிவா அங்கேயே யாரோ பெட்டையை விரும்புறானாம்... அவன்ரை கலியாணத்துக்கு முன்னால சியாமளாவுக்கு முடிக்கவேணுமெண்டு விரும்பினம்..."- அம்மா தயங்கித் தயங்கிச் சொல்லிக்கொண்டே போகவும், சாந்தன் சட்டென்று தடுத்தான்.

"எனக்குத் தெரிஞ்சு போச்சுது... சியாமளாவை எனக்குக் கட்டிவைக்க நினைக்கிறீங்களோ...?"

"அப்பிடி நினைக்கிறதில என்ன பிழை...?"- தாத்தா குறுக்குக்கேள்வி போட்டார்.

"நீங்கள் நினைக்கிறதில பிழையில்லை.. ஆனால் எனக்கு சியாமளாவில அந்தமாதிரி நினைப்பு எண்டைக்கும் வந்ததில்லை... அவளுக்கும் அப்பிடித்தானிருக்கும்..."

"உனக்கெப்பிடித்தெரியும்... அவளுக்கும் சம்மதமெண்டுதான் நல்லம்மா சொன்னவள்..."- அம்மா ஒருமுடிவுடன் பேசினாள்.

"இஞ்ச யார்தான் பொம்பிளையிடம் சம்மதம் கேட்டுக் கலியாணம் செய்யிறீங்கள்... நான் அவளிட்ட நேராக் கேட்டுக்கொள்கிறன்... எனக்கு அவள் சினேகிதி... அவளுக்கும் அதேபோலத்தானே இருக்கவேணும்..."

"டேய் சாந்தன்... வீண்கதை கதைச்சு எல்லாத்தையும் குழப்பிப்போடாத...உனக்கொண்டும் தெரியாது..."- அப்பா இரைந்தார். 

"கலியாணம் செய்துவைக்க வெளிக்கிட்டுட்டீங்கள்.. ஆனால் நான் என்ரை விருப்பத்தைச் சொல்லக்கூடாதே...?"

" வடிவேலண்ணருக்கு நாங்கள் நிறையக் கடன் பட்டிருக்கிறம்... இப்ப இந்தக்கலியாணம்தான் அதுக்கெல்லாம் ஒரே நன்றிக்கடன்..." அம்மா தொடர்வதை எரிச்சலுடன் பார்த்திருந்தவன் ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தான். 

"சியாமளா இனியும் ஒண்டும் சொல்லமாட்டாளெண்டு தெரியுது.. நானே சொல்லுறன்... அவளும், கந்தையா மாமாவின்ரை மகன் பாலனும் பத்து வருசமா விரும்பிக்கொண்டிருக்கினமெண்ட விசயம் உங்களில ஆருக்காவது தெரியுமோ...?"

"என்னடா சொல்லுற...பாலன் வவுனியாவில எல்லோ வேலை... உனக்கெப்பிடித் தெரியும்...?"- அப்பா அதிர்ச்சியானது மனதுக்குக் கஷ்டமாக இருக்கவே, " பாலனும் என்ரை சினேகிதன் தானே அப்பா... அவை ரெண்டுபேரும் லவ் பண்ணத்தொடங்கினதுமே எனக்கும் விசயம் தெரியும்... " மெதுவாகச் சொன்னான்.

" இப்ப என்னடா செய்யுறது..."- அம்மா கலக்கத்துடன் கேட்க, இதில யோசிக்க என்ன இருக்கு... நல்லம்மா மாமியிட்ட விசயத்தைச் சொல்லுங்கோ.. பாலனும் நல்ல வேலையில்தானே இருக்கிறான்...அவ மறுக்க மாட்டா... பாவம் சியாமளா... அவளின்ரை சூழ்நிலை உண்மையைச் சொல்லமுடியாமல் என்னைக் கட்டுறதுக்குச் சம்மதிச்சிருக்கிறாள்..."

"இதை எங்களிட்டயாவது அந்தப்பெட்டை சொல்லியிருக்கலாமே...?"

"இன்னும் யாழ்ப்பாணத்தில பல பொம்பிளைகளுக்கு இதையெல்லாம் வெளிப்படையாகக் கதைக்கிற அளவுக்குத் தைரியம் வரேல்லையம்மா... பாவம் அவள்.. நீங்கள்தான் அவள் விரும்பின வாழ்க்கையை கொடுக்கவேணும்..."

"நல்லநேரம் நல்லம்மா எங்களிட்ட சம்பந்தம் பேச வந்ததால உண்மை தெரிஞ்சுது... நாங்கள் கதைச்சுப்பேசி சியாமளாவின்ர கலியாணத்தை முடிச்சுவைக்கிறம்... எனக்கும் ஒருநல்ல மருமகள் கிடைக்கவேணுமேயெண்ட கவலை வந்திட்டுது..."அம்மா கவலைப்பட, 

"அதான் பக்கத்துவீட்டிலேயே தானே வளர்ந்துநிற்கிறாள் உங்கட மருமகள்..."- சாந்தன் சிறிது வெட்கத்துடன் சொல்வதைக்கேட்டு தாத்தா கையைத் தட்டினார். "கள்ளா... கடைசியில் நீயும் காதலில விழுந்திட்டியேடா... அதுவும் என்ரை மகன்வீட்டுக்குள்ளேயே..."- 

" ஒழுங்குமரியாதையா கொழும்புக்கு நடையைக்கட்டு... அடுத்த வருசம்தான் இஞ்ச வரோணும்... கலியாணத்துக்கெண்டு ஒருமாச லீவோட..."

மனசிலிருந்த தன்காதலையும் சொல்லி, நண்பர்களின் காதலையும் காப்பாற்றிய நிம்மதியுடன் சியாமளாவின் தந்தையைப் பார்த்துவரப் புறப்பட்டான் 

No comments:

Post a Comment